அமெரிக்காவினால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு சீனா உதவாதது ஏன்?

* அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் 75 விழுக்காடு சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் சீனா அங்கு எண்ணெய் துறையில் ஏராளமான முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

* சீனா கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மேற்கொண்டுவரும் BRI(Belt and Road Initiative) திட்டத்தில் வெனிசுவேலா அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

* சீனா முக்கியமாக செல்வாக்கைச் செலுத்தும்(அமெரிக்காவுக்கு போட்டியாக கட்டியுள்ள) ‘பிரிக்ஸ்’ அமைப்பில் வெனிசுவேலா இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

* வெனிசுவேலா தனக்கும் சீனாவுக்கும் சாதகமான சீன நாணயத்திலேயே வர்த்தகத்தை மேற்கொள்கிறது.

இந்நிலையில் வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் சீனாவுக்கும் எதிரானது என்றாலும் சீனாவானது அமெரிக்காவைப் போல் தனது கப்பற்படையை அனுப்பாமல் அமெரிக்காவிடம் வெனிசுவேலாவை/இலத்தீன் அமெரிக்காவை இழக்கிறது.

ஆனால் முந்நாளைய சோவியத் ஒன்றியமானது போலி சோசலிச குருச்சேவ் மற்றும் பிரஷ்னேவ் காலத்திலும் கியூபா, பாலஸ்தீனம், தென்னாப்பிரிக்கா, வியட்னாம் போன்றவற்றிற்கு அமெரிக்காவுக்கு எதிராக பலவித உதவிகளை செய்து அந்நாடுகள் அப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு போகாமல் பார்த்துக் கொண்டது.

ஆனால் இன்றோ போலி சோசலிச சீனா அவ்வாறில்லை.

கொரியாவை அமெரிக்காவின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு சீன இராணுவத்தை அனுப்பி வடகொரியா அமைவதற்கு காரணமான மாவோ காலத்திய சீனாவே வேறு.

அமெரிக்காவுக்கு மதுரோ அதிரடியாக கடத்தப்பட்ட பின் டிரம்ப்பை கண்டு அஞ்சியே வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியும் அதன் அண்டை நாடு கொலம்பியாவின் ஜனாதிபதியும் டிரம்ப்பிடம் சமரசமாகியே போகின்றனர்.

வெனிசுலேவின் எண்ணெய் வளத்தை உண்டு கொழுத்து நன்கு பலனடைந்த சோசலிச(?) சீனாவும் டிரம்ப்பிடம் இலத்தீன் அமெரிக்காவை விட்டுக் கொடுத்துவிட்டது. அமெரிக்காவை விடவே வலுவிருந்தும்.

குருச்சேவ் காலம் முதல் முப்பதாண்டுகள் சோசலிசம் இல்லாமல் போனாலும் முந்நாளைய சோவியத் ஒன்றியம் கியூபாவுக்கு ஆதரவாக நின்றதுபோல் மாவோவுக்கு பிந்தைய சீனா இன்று தயாராக இல்லை.

அதனால் வெனிசுவேலாவும் கொலம்பியாவும் டிரம்ப்பிடம் சமரசத்திற்கு செல்கின்றன.

மதுரோ டிரம்ப்பால் கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சீன அதிகாரிகளுடன்தான் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

மேலும் வெனிசுவேலாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீனாவின் இராணுவத் தளவாடங்களை டிரம்ப்பின் இராணுவத் தளவாடங்கள் செயலற்றதாக்கிய பின்தான் மதுரோ கடத்தப்பட்டார்.

மதுரோவின் இன்றைய இந்நிலைக்கு சீனாவின் இத்தகைய செயலின்மைக்கும் பங்கிருக்கிறது.

-பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர், புதிய முன்னோடி)

பின்னூட்டமொன்றை இடுக