வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!

வெனிசுவேலாவில் அமெரிக்காவானது 2002ல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதால் அப்போதைய வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் தனது ஆட்சியை இழந்தார்.

சாவேஸின் நலவாழ்வு ஆட்சியினால் பலனடைந்த கீழ்மட்ட வெனிசுவேலாவின் இராணுவ வீரர்களும் வெகு மக்களும் வீதிகளில் இறங்கி இரண்டே நாட்களில் அதை முறியடித்தனர். சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார்.

அவருடைய ஆட்சியில் துணை ஜனாதிபதியாக இருந்த மதுரோ இப்போது அமெரிக்காவினால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளார்.

மதுரோவின் ஆசான் சாவேஸுக்கு ஆதரவாக அப்போது களமிறங்கி வெற்றியை சாதித்த சாமானிய வெனிசுவேலா மக்கள் இப்போதும் இறங்கி மதுரோவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்களா?

மதுரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிட்டதால் அவர் வீழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது.

மதுரோ இராணுவக் கோட்டையில் (Ft.Tiuna Military Installation) படுக்கையறையில் தனது மனைவியுடன் உறங்கிக்கொண்டிருந்த போதே அமெரிக்க இராணுவம்  திடீரென்று நுழைந்து இருவரையும் அமெரிக்காவுக்கு கடத்தி சென்றுவிட்டது.

சிஐஏவின் ஊடுருவல்தான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. சிஐஏ தனது மாதக்கணக்கிலான உளவுச் செயற்பாட்டில் மதுரோ என்ன சாப்பிடுவார் என்பதையும் அவருடைய செல்லப் பிராணிகள் குறித்தும் தகவல்களை சேகரித்திருக்கிறது.

ஆனால் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சரியாக மதிப்பிட்டதால் சிஐஏவின் முயற்சியை இருபது தடவைகளுக்கும் மேல் முறியடித்தார். அவர் பயன்படுத்தும் சிகரெட் பிராண்டை அறிந்துகொண்டு அவரை கொல்வதற்கு எத்தனித்ததையும் முறியடித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் இலத்தீன் அமெரிக்காவில் பல ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்கொண்டதுடன் சிலே நாட்டின் ஜனாதிபதி அலெண்டே, பெரு நாட்டின் மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் கன்சோலா ஆகியோரை பிடித்தது.

இதில் அலெண்டே பிடிபட்ட உடனே கொல்லப்பட்டார்; கன்சோலா முப்பதாண்டு கால சிறைவாசத்திற்கு பின் சிறைச்சாலையிலேயே இறந்தார்.

மதுரோ இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலேயே இருந்து ஆட்சியை இழந்து அமெரிக்காவால் அமெரிக்காவிலேயே சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதே இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவிலான வலதுசாரிகள் நாடாளுமன்றத் தேர்தல்களின் மூலம் பல நாடுகளில் அண்மைக் காலமாக ஆட்சியை பிடித்து வருகிறார்கள்.

சென்ற நவம்பரில் டிரம்ப் வெளியிட்ட ‘தேசிய பாதுகாப்பு மூலவுத்தி’-25(National Security Strategy-25) ஆவணம் இலத்தீன் அமெரிக்காவையே முதன்மையாக குறி வைக்கிறது.

மதுரோ இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாததுடன் உடன் இருப்போரே உள்குத்து வேலையில் ஈடுபட்டு வந்ததன் விளைவே அவர் சந்திக்கும் இத்தகைய நிலை.

-பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர்,புதிய முன்னோடி)

பின்னூட்டமொன்றை இடுக