வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்

வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக ஜன. 6 முதல் ஒரு வாரம் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) அறைகூவல் விடுக்கிறது.

எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் திரு பிரவாஸ் கோஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“அனைத்து சர்வதேச சட்டங்கள், நடைமுறைகளை அப்பட்டமாகத் தகர்த்தெறிந்து, போர் வெறியர்களான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவை குண்டுவீசி, போதைப்பொருள் கடத்தல் என்ற மோசடி குற்றச்சாட்டில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியுள்ளனர். இச் செயல், ஈராக் மீது படையெடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாக பொய்யான சாக்குப்போக்கில் கொன்றதை எதிரொலிக்கிறது.
உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக மதுரோவை அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி, ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தை நீண்ட காலமாக மறைமுகமாக ஒத்திகை பார்த்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தக் கொடூரமான செயலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, அமைதியை விரும்பும் மக்கள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஆட்சியின் இந்த மிகக் கொடூரமான செயலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான இந்திய அரசாங்கம், ஆளும் இந்திய ஏகபோகவாதிகளின் வர்க்க நலனுக்கு அடிபணிந்து, இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முற்றிலும் புறக்கணித்து, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் இத்தகைய குற்றச் செயலைக் கண்டிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள். இது பெண்டகன் ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் என்பதை நாங்கள் திகைப்புடன் கவனிக்கிறோம். அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் விமானப்படை வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதும், கடந்த ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநில தலைநகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் எங்கள் கட்சி சிறிதும் தாமதிக்கவில்லை. இப்போது ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு வார கால ஆர்ப்பாட்டத்தை எங்கள் கட்சி ஏற்பாடு செய்யும். அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, போரை எதிர்க்கும், அமைதியை விரும்பும் அனைத்து நாட்டு மக்களையும் முன்வந்து பங்கேற்குமாறு நாங்கள் அறைகூவி அழைக்கிறோம்.

எஸ்.யூ.சி.ஐ கட்சி சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்

இவ்வாறு எஸ்.யூ.சி.ஐ(கம்யூனிஸ்ட்) கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக