டெல்லி கலவர “பெரிய சதி” வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இவர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்களான குல்ஃபிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரெஹ்மான் மற்றும் முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு நீதிமன்றம் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்குப் பிணை மறுக்கப்பட்டது.
“இந்தக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போகச் செய்வதாகாது. பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் (சுமார் 12 நிபந்தனைகள் உள்ளன). நிபந்தனைகள் மீறப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்ட பிறகு, விசாரணை நீதிமன்றம் பிணையை ரத்து செய்ய முழு உரிமை உண்டு,” என்று நீதிபதி அரவிந்த் குமார் தீர்ப்பைப் படித்தார்.
அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உள்ள சுதந்திரத்திற்கான உரிமை, நீண்டகால விசாரணைக்கு முந்தைய காவலை நியாயப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறது என்று நீதிபதிகள் அமர்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.
இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை விமர்சித்த மாற்றுக்கருத்து கொண்டவர்களைத் தண்டிப்பதற்காகவே இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் விமர்சகர்களும் மனித உரிமை அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன.
நன்றி: http://www.maktoobmedia.com


பின்னூட்டமொன்றை இடுக